கவர்னர்களுடன் இணைந்து மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற 50-வது கவர்னர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

நாட்டின் கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி அமைப்பில் கவர்னர்கள் சிறப்பான, முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் உள்பட அடித்தளத்தில் உள்ளவர்களை மேலே உயர்த்திவிடும் வகையில் கவர்னர்கள் பணியாற்ற வேண்டும். நடைமுறையில் உள்ள திட்டங்கள், மேம்பாட்டு பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அருகில் கொண்டுசெல்வதுடன், அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது மிகவும் முக்கியம். இந்திய அரசியல் அமைப்பில் உள்ள சேவைகளை எடுத்துக்கூறும் வகையில் மாநில அரசுகளும், கவர்னர்களும் பணியாற்ற வேண்டும். குறிப்பாக குடிமக்களின் கடமைகள், பொறுப்புகளை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்கள் பங்களிப்புடன் கூடிய நிர்வாகத்தை கொண்டுவர முடியும்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நூற்றாண்டை கொண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசியலமைப்புக்கு தூணாக விளங்கும் அவரது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற உங்களது பங்கின் அடிப்படையில், தேசிய கட்டமைப்பில் நமது இளைஞர்களும் பங்கேற்க உதவி செய்ய வேண்டும். மிகப்பெரிய சாதனைகளை அவர்கள் செய்யும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.

சுகாதாரம், கல்வி, சுற்றுலா ஆகிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் அவர்களுக்காக காத்திருக்கிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் கவர்னர் அலுவலகம் ஈடுபட வேண்டும். இதன்மூலம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

பழங்குடியினர் பிரச்சினை, வேளாண்மையில் சீர்திருத்தம், நீராதார பாதுகாப்பு, புதிய கல்வி கொள்கை, மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவது ஆகிய 5 முக்கிய திட்டங்களுக்காக துணை குழுக்கள் அமைக்கப்பட்டு விரிவான விவாதம் நடைபெற்றது பாராட்டுக்குரியது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *