Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் – தவான் இடத்தில் யார்?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் தொடக்க வீரராக யார் களம் இறக்கப்படுவார் என்பது குறித்து இந்திய ரசிகர்களிடையே பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் விருப்பமுள்ள கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரிய சங்கத்திற்கு பரிந்துரைத்த வண்ணம் உள்ளனர்.

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தவானுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, ரிஷப் பந்த் ஆகிய வீரர்களில் யாரேனும் ஒருவரை தெர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இந்திய ரசிகர்கள் அணியில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ள வீரர்களின் கிரிக்கெட் விவரங்கள் சில பின்வருமாறு:-

ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 210 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் 62 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி 1681 ரன்கள் எடுத்துள்ளார். 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். உலகக்கோப்பைக்கான அணித்தேர்வின்போது இவரது பெயரும் பரிந்துரையில் இருந்தது. ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியோடு, மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடியதால் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பதி ராயுடுவை பொருத்தவரை இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1694 ரன்களும் 147 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3300 ரன்களும் சேர்த்துள்ளார். இவரைத்தான் நான்காவது இடத்திற்காக இந்திய அணி நிர்வாகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏராளமான வாய்ப்புகள் வழங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சொதப்பியதால் விஜய் சங்கரை தேர்வு செய்தது. இதனால் சற்று சர்ச்சை எழுந்தது. அதை சரி செய்யும் வகையில் நீண்ட தொடர் என்பதால் பேட்ஸ்மேன் யாருக்காவது காயம் ஏறபட்டால் மாற்று வீரராக தேர்வு செய்யும் காத்திருப்பு பட்டியலில் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வுக்குழு அறிவித்தது. இதனால் அம்பதி ராயுடு வாய்ப்பிற்கான முக்கிய இடத்தில் இருப்பார்.

மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மனான ரிஷப் பந்த் இந்திய அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 93 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 1736 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி முத்திரை படைத்த ரிஷப் பந்த்-ஐதான் உலகக்கோப்பையில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மிக வலிமையாக எழுந்தது. டோனியா? ரிஷப் பந்தா? என்ற விவாதமே நடந்தது. இறுதியில் டோனி ஆஸ்திரேலியா தொடரில் அசத்த டோனி விக்கெட் கீப்பராகவும், தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதிரடி பேட்ஸ்மேன் என்பதாலும், இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும் இவருக்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது.

இந்த மூன்று வீரர்களில் எந்த வீரர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவானின் இடத்தை பிடிப்பார் என்பது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *