Tamilசெய்திகள்

இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள்!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான விசாரணைஅறிக்கையை கடந்த ஆண்டில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

வழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் வரும் 11-ம் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வேண்டும் வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, ‘தரமான அரசாங்கம்’ அமைப்பினர் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சியை சேர்ந்த வயதில் மூத்த உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று பிரதமருக்கு எதிரான பரப்புரை பிரசாரத்தில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *