இந்தியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து – 3 பேர் பலி

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற பெயரில் கார்பந்தயம் இந்தியா முழுவதும் 6 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு சுற்று சென்னை மற்றும் கோவையில் நடந்தது.

3-வது சுற்று போட்டி ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நேற்றும், இன்றும் நடத்த திட்டமிடப்பட்டது. 53 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஓடுபாதையில் 6 முறை சாம்பியனான கவுரவ் கில்லின் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

145 கிலோ மீட்டர் வேகத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்த போது, ஒரு வளையில் திரும்புகையில், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த பகுதியைச் சேர்ந்த நரேந்திரா, அவரது மனைவி புஷ்பா, இவர்களது மகன் ஜிதேந்திரா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய கவுரவ் கில் விலாபகுதியில் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து எதிரொலியாக பந்தயம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

சம்பவம் குறித்து இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளன தலைவர் பிரித்விராஜ் கூறுகையில், ‘கார்பந்தயம் காரணமாக இந்த பகுதியை எங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தோம். ரோடு தடை செய்யப்பட்டிருப்பதால் யாரும் வர வேண்டாம் என்று கடந்த 15 நாட்களாக இங்குள்ள கிராம மக்களுக்கு நாங்கள் எச்சரித்தபடி இருந்தோம். மோட்டார் சைக்கிளில் வந்த நரேந்திரா, எங்களது பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு பந்தய பாதைக்குள் நுழைந்ததால் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டது. கவுரவ் கில் முடிந்த வரை பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகம் காரணமாக ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

முன்னணி கார்பந்தய வீரராக வலம் வரும் டெல்லியைச் சேர்ந்த 37 வயதான கவுரவ் கில், சமீபத்தில் மத்திய அரசின் சார்பில் அர்ஜூனா விருது பெற்றார். இந்த விருது பெற்ற முதல் கார்பந்தய வீரர் இவர் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *