இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடர் முக்கியமில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்டதில் இங்கிலாந்தும் ஒன்று. இதுவரை ஏறக்குறைய 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஜூலை 1-ந்தேதி வரை இங்கிலாந்தில் விளையாட்டு போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஜூலை 30-ந்தேதியில் ஆகஸ்ட் மாதம் வரை தலா மூன்று டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விளையாட இருந்தது. தற்போதைய நிலையில் அதற்கு சாத்தியமில்லை.

இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தால் இங்கிலாந்து கொரோனாவிற்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். ஆனால், தற்போதைய நிலையில் இங்கிலாந்து தொடர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில் ‘‘வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

தற்போது இங்கிலாந்தில் மோசமான நிலை நிலவுகிறது. அவர்களுடைய திட்டம் குறித்து நாங்கள் கேட்டுள்ளோம். நாங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டோம். ஆனால், அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் மதிப்பீடு செய்து முடிவு எடுப்போம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *