அரசியலில் வயது ஒரு பாரம் இல்லை – எடியூரப்பா

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மக்களின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.

வயது 77 ஆக இருந்தாலும், அந்த வயதால் கிடைத்த அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். கவர்னர் பதவி கிடைத்தால் அதை நான் ஏற்கமாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். இங்கேயே இருந்து விவசாயிகளின் நலனுக்காக போராடுவேன்.

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் பாஜக போட்டியிடும். குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். பாஜக, இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெறாது என்று தேவேகவுடா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி தான் இரண்டு இலக்க எண்களில் வெற்றி பெறாது.

நாட்டின் எல்லைகளை சிறப்பான முறையில் காத்து வருகிறோம். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை மோடி நடத்தியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள்.

அக்கட்சியின் தலைவர்கள் வேண்டுமானால் ஒற்றுமையாக செயல்படலாம். ஆனால் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். 38 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.

பாஜகவில் இருந்து விலகி நான் தனி கட்சி தொடங்கி தவறு செய்தேன். அதன் பிறகு நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கர்நாடகத்தில் மாநில கட்சிக்கு இடம் இல்லை.

முன்பு பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தப்படி ஆட்சி நடத்தப்பட்டது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

அடுத்த 20 மாதங்கள் ஆட்சி நடத்த பாஜகவுக்கு தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் வாய்ப்பு வழங்கவில்லை. தேவேகவுடா, குமாரசாமி நம்பிக்கை துரோகிகள். அதனால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் குமாரசாமி நிபுணர். அது அவரது திறமை. இந்த பாராளுமன்ற தேர்தலில் 3 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பிரச்சினை ஏற்படும். அதன் மூலம் இந்த கூட்டணி அரசு கவிழும்.

மக்கள் ஆதரவுடன் குடும்பத்தில் 2, 3 பேர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. இது எல்லா கட்சிகளிலும் உள்ளது. ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர். இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப அரசியலுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேவேகவுடா குடும்பத்தினர் அந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். அனைத்து அதிகாரமும் தங்களுக்கே வேண்டும் என்று செயல்படும் தேவேகவுடா குடும்பத்தினரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *