அமைச்சர் பதவி கொடுத்தாலும் அதிமுக-வில் இருந்து வெளியேற மாட்டேன் – தோப்பு வெங்கடாச்சலம்

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியை உதறினார்.

அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று கூறினார்.

இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

கட்சி பதவியை விட்டு விலகிய அவர் அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.

மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன்.

எனது தொகுதி மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது.

இதனால் குடிநீர் குடிக்க உகந்தது அல்ல என்று அப்போதய தமிழக முதல்வர் அம்மாவிடம் கூறி பெருந்துறை பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். அதுவும் கொடிவேரி அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என கேட்டேன். அம்மாவை 2 முறை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். அவரும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக நிதியை அறிவித்தார்.

இந்த நிலையில் அம்மா மறைந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் அண்ணன் பழனிசாமியிடம் வைத்தேன். சிறிது காலம் தாமதம் ஏற்பட்டாலும் குடிநீர் திட்டத்துக்கு அவர் ரூ.240 கோடி ஒதுக்கினார். அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என நான் அவருக்கு துணையாக நின்றேன். இப்போதும் எனது நிலை அதே தான்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.

இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன்.

அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *