Tamilசெய்திகள்

அமெரிக்க பள்ளிகளில் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை!

இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் 1997 முதல் 2007 வரை 7 பாகங்களாக வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

‘ஹாக்வார்ட்ஸ்’ எனப்படும் மந்திரப்பள்ளியை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வசூலை வாரி குவித்தன. இன்றளவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பள்ளி மாணவர்கள் ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களை விரும்பி படிக்கிறார்கள்.

இந்த நிலையில், அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் யாரும் இனி அந்த புத்தகங்களை படிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பள்ளி நூலகத்தில் இருந்த ‘ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த அறிவிப்பு குறித்து பள்ளியின் பாதிரியார் டான் ரீஹில் மாணவர்களின் பெற்றோருக்கு இ-மெயில் மூலம் அனுப்பிய செய்தியில் “ஹாரி பாட்டர் புத்தகங்கள் நல்ல மற்றும் தீய சக்திகளை முன்வைத்து கற்பனையாக எழுதப்பட்டிருந்தாலும், அது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை. அந்த புத்தகங்கள் கற்பனையாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாபங்களும் மந்திரங்களும் உண்மையானவை.

இதை ஒருவர் படிக்கும்போது அவை தீய சக்திகளை கொண்டுவந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்கா மற்றும் ரோம் நாட்டில் இருக்கும் பேய் ஓட்டுபவர்கள் பலரிடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர்களும் இந்த புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்” என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *