அப்பாச்சி வகை 8 விமானங்கள் இந்திய விமான படையில் சேர்ப்பு

இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் ஹெலிகாப்டர்கள் ( Apache AH-64E) வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது.

இதில், கடந்த ஜூலை மாதம் 4 ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தன. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் இணைக்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இன்று விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் இதற்கான விழா நடைபெற்றது. அப்போது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர்களை விமானப்படையில் இணைக்கும் விழாவில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு ஹெலிகாப்டர்களுக்கு பூஜை செய்தார். இதன்மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் 14-வது நாடாக இந்தியா உள்ளது.

2020-க்குள் மீதமுள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்களையும் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இதுவரை 2200 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *