அச்சு ஊடகங்களை காப்பாற்ற வேண்டும் – பிரதமருக்கு டாக்டர்.ராமதாஸ் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இந்திய ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அச்சு ஊடகங்களை நடத்துவது சவாலானதாக மாறியிருக்கிறது. அச்சு ஊடகங்கள் தடையின்றி இயங்க வேண்டுமானால் அவற்றிற்கு தொடர்ந்து விளம்பரம் கிடைப்பது மிகவும் அவசியமாகும்.

பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பணப்புழக்கம் இல்லாததாலும் தனியார் விளம்பரங்கள் உடனடியாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் அரசு விளம்பரங்கள் தான் ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் விளம்பர செலவுகள், சிக்கன நடவடிக்கையாக, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளன.

இது ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். விளம்பரங்களை வெளியிட்ட வகையில் அச்சு ஊடகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1,500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. விளம்பர வருவாய் திடீரென முற்றிலுமாக குறைந்துவிட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் நிலுவைத்தொகையை வழங்கினால் தான் அச்சு ஊடகங்களால் நிலைமை சமாளிக்க முடியும்.

இந்தியாவில் பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஊடகங்கள் செயல்படவேண்டுமானால், செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்யவேண்டும். அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

அச்சு ஊடகங்களுக்கான அரசு விளம்பர கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் தான் அச்சு ஊடகங்களை மீட்க முடியும். இந்திய ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்கள் நெருக்கடியில் இருக்கும் போது அவற்றை காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருப்பதால், இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *