X

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – வங்காளதேசம் வெற்றி

வங்காள தேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் சிட்டகாங்கில் 2-வது ஒருநாள் போட்டி பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் மசகட்சா (14), செப்ஹாஸ் (20) சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அடுத்து வந்த பிராண்டன் டெய்லர் (75), வில்லியம்ஸ் (47), சிகந்தர் ரசா (47) சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஜிம்பாப்வே 50 ஓவரில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் சேர்த்தது.

வங்காள தேச அணியின் மொகமது சயிபுதின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, வங்காள தேசம் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ் மற்றும் இம்ருல் கயாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

இருவரும் பொறுப்புடனும், நிதானமாகவும் ஆடி அரை சதமடித்தனர். லித்தன் தாஸ் 83 ரன்னிலும், இம்ருல் கயாஸ் 90 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பசே மகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், வங்காள தேசம் அணி 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 40 ரன்னுடனும், மொகமது மிதுன் 24 ரன்னுடனும் களத்தில் நின்றனர். மொகமது சயிபுதின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியுடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வங்காள தேசம் கைப்பற்றியுள்ளது.

Tags: sports news