இளையோர் ஒலிம்பிக் போட்டி – இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஹாக்கி அணிகள்

206 நாடுகள் கலந்து கொண்டுள்ள 3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதன் ஹாக்கி (5 பேர்) போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆனால் அந்த முன்னிலையை இந்திய அணியால் நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. ஆட்டம் போகப்போக இந்திய அணியினரின் தடுப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வை பயன்படுத்தி மலேசிய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது.

முடிவில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இந்திய அணி சார்பில் கேப்டன் விவேக் சாகர் பிரசாத் 3-வது மற்றும் 6-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மலேசிய அணி தரப்பில் பிராதுஸ் ரோஸ்டி 5-வது நிமிடத்திலும், அகிமுல்லா அனார் 14-வது மற்றும் 19-வது நிமிடத்திலும், ஆரிப் இஷாக் 17-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் சந்தித்தன. இந்திய அணி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த கோலை மும்தாஜ் கான் அடித்தார். அதன் பின்னர் அர்ஜென்டினா அணியினரின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறினார்கள். அத்துடன் அந்த அணியின் தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்தால் அதனை தகர்த்து இந்திய அணியினரால் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் அசுர தாக்குதலை தொடுத்த அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து 3 கோல்களை திணித்தது. அந்த அணியின் ஜியானெல்லா பாலெட் 7-வது நிமிடத்திலும், சோபியா ராமல்லோ 9-வது நிமிடத்திலும், பிரிசா புருக்ஜெஸ்செர் 12-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி கண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

இந்திய அணி இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி என்று மொத்தம் 10 பதக்கங்கள் வென்று 10-வது இடத்தில் உள்ளது. ரஷியா 24 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என்று 43 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *