உலக கோப்பை போட்டியின் போது வீரர்களுடன் மனைவிகள் தங்க வேண்டும் – கோலி கோரிக்கை

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேப்டன் விராட்கோலி, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து இருக்கிறார்.

தற்போது அந்த விவரம் வெளியாகி இருக்கிறது. உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் பெண் தோழியை உடன் அழைத்து சென்று தங்களுடன் தங்க வைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் விளையாட செல்லும் போது இந்திய வீரர்கள் அங்குள்ள நகரங்களுக்கு ரெயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது வீரர்கள் பாதுகாப்பாக செல்ல தனி ரெயில் பெட்டியை முன்பதிவு செய்து தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். குறிப்பாக வெளிநாட்டு பயணத்தின் போது வீரர்களுக்கு அங்கு கிடைக்கும் பழம் மற்றும் உணவுகள் வழங்கப்படுவது வாடிக்கையாகும். அப்படி இல்லாமல் இந்திய வீரர்கள் சாப்பிடும் உணவு மற்றும் பழங்களை வழங்க வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக வாழைப்பழம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழைப்பழம் உடனடியாக ஊட்டத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியதாகும் என்றும் விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *