உலக கோப்பை ஆக்கி – இந்திய அணி அறிவிப்பு

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது அல்லது 3-வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். இந்திய அணி ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித்குமார் உபாத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.

அணி தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் ‘உலக கோப்பை போட்டிக்கு சரியான கலவையிலான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வில் சில கடினமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 18 பேர் கொண்ட இறுதி அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு பார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர்ந்து தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools