பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் (பி பிரிவு) இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. அதன்பின்னர் நள்ளிரவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தினால் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
துவக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, பெத் மூனே ஆகிய இருவரும் தலா 48 ரன்கள் விளாசினர். கேப்டன் மெக் லேனிங் 41 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே சேர்த்தது. இதனால் 52 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இன்று அதிகாலையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் (ஏ பிரிவு) வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கசேத அணியை வீழ்த்தியது.
இப்போட்டித் தொடரில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.