டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் நேர் செட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த வோஸ்னியாக்கி முதலாவது செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் 5-5 என்று வரை சமநிலை வந்தது. அதன் பிறகு அடுத்த இரு கேம்களை ஸ்விடோலினா தனதாக்கி, வோஸ்னியாக்கியின் கனவை சிதைத்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி (ஒரு வெற்றி, 2 தோல்வி), கிவிடோவா (3 தோல்வி) வெளியேறினர்.
‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஒசாகா (ஜப்பான்)-கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.