ஆறாவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.
இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார். ரோட்ரிகஸ் 26 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. துவக்க ஜோடி வியாட்-பீமான்ட் ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் இணைந்த ஜோனஸ்-சிவர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
வெற்றிபெற ஒரு ரன் தேவை என்ற நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜோனஸ். ஜோனஸ் 53 ரன்களுடனும், சிவர் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.