10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.
51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார்.