பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – காலியிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இப்போது எனக்கு பழகி போய் விட்டது. குத்துச்சண்டை களத்திற்குள் புகுந்ததும் எனது நம்பிக்கை அதிகரித்து விடும். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மல்லுக்கட்டினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ”மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது.” என்று மனிஷா குறிப்பிட்டார்.

இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி கூறுகையில், ”நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools