10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.
மேரிகோம் (48 கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா பூனியா ஆகியார் இடம் பிடித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு உலக போட்டியில் மகுடம் சூடிய இத்தாலியின் அலிசியா மெசியானோ (பெதர் வெயிட் பிரிவு), 81 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவின் நடப்பு சாம்பியன் யாங் ஸியாலி (சீனா), வெள்ளிப்பதக்கம் வென்ற கைய் ஸ்கோட் (ஆஸ்திரேலியா), ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்ற மிரா போட்கோனென் (பின்லாந்து) மற்றும் முன்னணி நட்சத்திரங்களான பியாம்விலாய் லாபியாம் (தாய்லாந்து) அனஸ்டசியா பெலியக்கோவா(ரஷியா), விர்ஜினியா புச்ஸ் (அமெரிக்கா), லின் யு டிங் (சீனதைபே) உள்ளிட்டோரும் இந்த போட்டியில் வரிந்து கட்டுவதால் இந்திய வீராங்கனைகள் கடும் சவால் களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறைந்தது 3 பதக்கங்கள் கிடைக்கும் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் எதிர்பார்க்கிறது.
5 முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் மீண்டும் சாதிக்க வாய்ப்புள்ளது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான மேரிகோம், 6-வது முறையாக தங்கப்பதக்கத்தை அறுவடை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘எனது 48 கிலோ எடைப்பிரிவில் 2001-ம் ஆண்டில் இருந்து இன்னும் நிறைய வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள். அவர்களை பற்றி நான் நன்கு அறிவேன். அதே சமயம் இளம் வீராங்கனைகள் கடும் போட்டியாளராகவும், சாதுர்யமாகவும், வேகமாகவும் செயல்படுகிறார்கள். எனது அனுபவத்தை பயன்படுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.
இந்திய பயிற்சியாளர் ரபெல்லே பெர்கமாஸ்கோ கூறுகையில், ‘கால்பந்தில் மரடோனா எப்படியோ அதே போல் குத்துச்சண்டையில் மேரிகோம். அபாரமான திறமை கொண்டவர். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது நெருக்கடியாக இருக்கும். ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என்று நம்புகிறேன்’ என்றார்.
குத்துச்சண்டை திருவிழா தொடங்குவதற்கு முன்பே சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன. டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு வீராங்கனைகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் முககவசம் அணிந்தபடி வெளியே வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்க போட்டி என்பதால் காற்று மாசு தாக்கத்தை ஏற்படுத்தாது.
செர்பியா நாட்டில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு பிரிந்த கொசோவாவை இந்தியா தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கொசோவாவை சேர்ந்த வீராங்கனை டான்ஜிட்டா சாதிகு மற்றும் இரண்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசு இன்னும் ‘விசா’ வழங்கவில்லை. அதே நேரத்தில் கொசோவாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே ‘விசா’ பிரச்சினையை இந்தியா சரிசெய்யாவிட்டால், எதிர்காலத்தில் பெரிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
இந்த போட்டிக்கான தொடக்க விழா நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணிக்கு மேரிகோம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.