பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
20 ஓவர் உலக கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 முறை (2010, 2012, 2014) வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை வாகை சூடியுள்ளன. இந்திய அணி உலக கோப்பையை வென்றதில்லை. இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியதில்லை. 2009, 2010-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் அரைஇறுதியை எட்டியதே இந்தியாவின் சிறப்பான செயல்பாடாகும்.
50 ஓவர் போட்டியில் ஓரளவு நன்றாக ஆடும் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலித்ததில்லை. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி சுற்றில் வங்காளதேசத்திடம் மண்ணை கவ்வியது. ஆனாலும் தற்போதைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரைத் தான் இந்திய அணி பேட்டிங்கில் மலை போல் நம்பி இருக்கிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர்கள் பூனம் யாதவ், எக்தா பிஷ்ட், தீப்தி ஷர்மா ஆகியோர் மிரட்டினால் இந்தியாவின் கை ஓங்கும்.
இந்த போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தான் வலுமிக்கதாக திகழ்கிறது. எனவே இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே அரை இறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த மூன்று உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி லீக் சுற்றை தாண்டவில்லை. இந்த முறையாவது எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில், ‘சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தனிப்பட்ட முறையில் நான் அந்த தொடரில் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஒரு ஆட்டத்தில் நானும், ஹர்மன்பிரீத் கவுரும் சரியாக ஆடவில்லை. ஆனாலும் மற்ற வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தால் 170 ரன்கள் குவித்தோம். இதே போல் கடந்த மூன்று மாதங்களில் பந்துவீச்சிலும் பெரிய அளவில் மேம்பட்டு இருக்கிறோம். கடந்த உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது பீல்டிங்கிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்’ என்றார்.
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். எதை பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக ஆட வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள ரமேஷ் பவார், ‘தனிப்பட்ட வீராங்கனைகளின் திறமை மேம்பட்டால், அணியும் வளர்ச்சி அடையும். அந்த வகையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இது போன்ற ‘மெகா’ போட்டிகளில் சாதனைகள் முறியடிக்கப்படும் போது தான் அனைவராலும் கவனிக்கப்படுவார்கள். அதைத் தான் இந்த தொடரில் எதிர்பார்க்கிறேன். யாராவது ஒரு இந்திய வீராங்கனை சதம் அடிக்க வேண்டும், மற்றொருவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. புரோவிடென்சில் நடக்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி), வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் (இந்திய நேரப்படி மறுநாள் அதிகாலை 5.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டிக்கான இந்திய அணி வருமாறு:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா, தான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.
இந்திய அணி மற்ற ஆட்டங்களில் 11-ந்தேதி பாகிஸ்தானையும், 15-ந்தேதி அயர்லாந்தையும், 17-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பையோடு தான் பெண்கள் உலக கோப்பையும் நடத்தப்படும். இந்த தடவை தான் பெண்கள் உலக கோப்பை தனியாக நடத்தப்படுகிறது.