பேச மறுத்த பெண்ணை குத்தி கொலை செய்த வாலிபர்- வள்ளியூரில் பரபரப்பு
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெரும்சிலம்பு, வாரியவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மெர்சி (வயது23). இவர் வள்ளியூரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பணியில் இருந்த மெர்சி, தோழி ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ஜவுளிக்கடையை விட்டு வெளியே வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடை பக்கம் வந்த போது, அங்கு ஏற்கனவே ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து விட்டு வேலையை விட்டு நின்று விட்ட ரவீந்திரன் மெர்சிக்காக காத்து நின்றார்.
அவரிடம் மெர்சி பேச முயன்ற போது அந்த வாலிபர் தனது கையில் உள்ள கத்தியால் மெர்சியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மெர்சி பலியானார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வள்ளியூர் பஸ் நிலையம் அருகே எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து திடுக் தகவல்கள் கிடைத்தன.
குமரி மாவட்டம் வாரிய விளையை சேர்ந்த மெர்சி அந்த ஜவுளிக்கடையில் கடந்த 3½ மாதத்திற்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். அதே ஜவுளிக்கடையில் திருக்குறுங்குடி அருகே உள்ள மகிலடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் ரவீந்திரன் (31) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
முதலில் வேலை தொடர்பாக ரவீந்திரனும், மெர்சியும் பேசி பழகினர். இதில் ரவீந்திரனுக்கு மெர்சி மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டது. இதனால் அவர் மெர்சியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதை மெர்சி ஏற்கவோ, மறுக்கவோ இல்லையாம். ஆனால் அவர் தொடர்ந்து ரவீந்திரனிடம் நட்பாக பேசி, பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரவீந்திரனுக்கு ஜவுளிக்கடை வேலை பிடிக்காததால், பணியில் இருந்து நின்று விட்டார். அதன் பிறகு அவர் செல்போன் மூலம் மெர்சியிடம் பேசி உள்ளார். முதலில் அவரிடம் சகஜமாக பேசிய மெர்சி, அதன் பிறகு தன்னிடம் காதல் திருமணம் என்று பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இந்த நிலையில் ரவீந்திரன் வேறு வேலைக்கும் செல்லாமல் அடிக்கடி மெர்சி வேலைக்கு செல்லும் போதும், பணி முடிந்து திரும்பும் போதும் அந்த பகுதிக்கு சென்று அவருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் மெர்சி பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ரவீந்திரன், மெர்சியிடம் கடைசியாக உன்னிடம் பேசி விட்டு வெளியூர் செல்ல போவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மெர்சி அங்கு சென்ற போது ரவீந்திரன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து வள்ளியூர் போலீசார் இன்று ரவீந்திரனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரவீந்திரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மெர்சி என்னுடன் முதலில் நன்றாக பேசி பழகி வந்தார். ஆனால் நான் வேலையை விட்டு நின்றதால் என்னுடன் பேசுவதை விட்டு விட்டார். என்னை காதலிக்கவும் மறுத்து விட்டார். நான் வேறு வேலைக்கு சென்று அவரை திருமணம் செய்ய முன்வந்தேன். ஆனால் மெர்சி திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.
இதனால் எனக்கு கிடைக்காத மெர்சி, வேறு யாருடனும் வாழ கூடாது என்று முடிவு செய்து கடைசியாக அவரிடம் பேச வேண்டும் என்று வரச் சொன்னேன். அவர் அங்கு வந்ததும், மீண்டும் என்னை காதலிக்கும்படி கேட்டேன். ஆனால் மெர்சி அதற்கு பதில் சொல்லாததால், அவளை குத்திக்கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரவீந்திரனை போலீசார் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.