X

ஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

18 எம்.எல்.ஏ.க்களுடைய தொகுதி மக்களின் கோரிக்கைகளை, அடிப்படை வசதிகளை, குறிப்பாக குடிநீர் பிரச்சனை, சாலை வசதி போன்றவற்றில் பாராமுகமாக இருந்து அந்த தொகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மக்களை பழனிசாமி அரசு வஞ்சிக்கிறது. தனி நபர் மீதுள்ள கோபத்தை 2½ லட்சம் வாக்காளர்கள் மீது, வாழும் பொதுமக்கள் மீது காண்பிக்கிறார்கள்.

அமைச்சர் மீதுதான் குற்றச்சாட்டு வந்துள்ளது. குரல் கேட்டால் அமைச்சர் குரல் போன்றுதான் தெரிகிறது. உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்தாக வேண்டும். அதுதான் உண்மை.

இதுபற்றி முதல்- அமைச்சரிடம் கேட்டீர்களா? ஜெயக்குமார் அதற்கு பதில் சொன்னாரா? அவர் குரல் போன்று இருக்கிறது. அதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும். அம்மாவின் சீட்டில் அமர்பவர்கள் எல்லாம் அம்மாவாகி விடுவார்களா?

முதல்-அமைச்சர் மீது என்ன குற்றச்சாட்டு, முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் மூலம் அவர் பொறுப்பு வகிக்கின்ற நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. அவ்வாறு பணிகளை வழங்கலாமா? வழங்கக் கூடாதா? என்பதுதான்.

அது உலக வங்கி ஒப்பந்தம். உலக வங்கி நடைமுறை அதனை அனுமதிக்கிறதா? என்பதுதான். அதனை விசாரணை செய்ய வேண்டும். அதனை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை சரியாக விசாரணை செய்யவில்லை என்ற எண்ணத்தினால்தான். நீதிபதி அதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு தனி அதிகாரம் இருந்தாலும் அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்து யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளிவிட நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் துறை மீதான டெண்டர் ஒதுக்கீட்டில், நீதிமன்றமே சொன்ன பிறகு விட்டுவிட வேண்டியதுதானே? எதற்கு சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்ல வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு சரியான முடிவை எடுப்பார்கள்.

அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு விழாவை அவர்கள் எல்லா ஊர்களிலும் காலி சேர்களோடு, கூட்டம் போட்டுவிட்டு, முடிந்த வரையில் டி.டி.வி. தினகரனை தாக்கி பேசுகிறார்கள். அதுதான் நடந்தது. கட்சியை ஆரம்பித்த புரட்சித்தலைவரும், 30 ஆண்டுகள் கட்டிக் காத்திட்ட அம்மாவின் ஆன்மாவும் இதனை ஏற்றுக் கொள்ளாது என்பது வரும் காலத்தில் தெரியும்.

அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் என்னுடன் உள்ளனர். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் கொஞ்சம் பேர் அங்கு இருக்கிறார்கள்.

இந்த ஆட்சி இல்லையென்றால் அந்த கட்சியே இருக்காது. எங்களோடு வந்து விடுவார்கள். அதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டு எடுக்கும் என்று சொல்கிறேன்.

இவ்வாறு தினகரன் கூறினார்.