Tamilசெய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் – 11 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 3 சிறப்பு முகாம்கள் இதுவரை நடந்து உள்ளன.

இந்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் பற்றிய விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வரும் 31-ந் தேதி தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதி, கடந்த 7-ந் தேதி ஆகிய நாட்களில் 3 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டன.

4-வது இறுதி சிறப்பு முகாம் வரும் 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 சிறப்பு முகாம்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (விண்ணப்பம்-6) 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 972 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 400 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

பெயர் நீக்கம் செய்ய (விண்ணப்பம்-7) 77 ஆயிரத்து 879 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (விண்ணப்பம்-8) 1 லட்சத்து 7 ஆயிரத்து 4 ஆயிரத்து 418 பேரும், முகவரி மாற்றம் செய்ய (விண்ணப்பம்-8) 77 ஆயிரத்து 40 பேர் என மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரத்து 710 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

தொடர்ந்து வரும் 31-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது. மீண்டும் வரும் 14-ந் தேதி அன்று இறுதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என்று தலைமைச்செயலாளர், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மழை மற்றும் வழக்கு விவரங்கள் மாநில அரசுக்கு தான் தெரியும். இருந்தாலும் மாநில அரசு கூறியப்படி இந்த தொகுதிகளில் அதற்கான நிலவரம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *