விராட் கோலிக்கு சவால் விட்டிருக்கும் சோயிப் அக்தர்!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகியவற்றில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
இந்த மூன்று சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 38 சதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 62 சதங்கள் அடித்துள்ளார். 38 சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு கிரிக்கெட் விமசகர்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் விராட் கோலிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புது சவாலும் விடுத்துள்ளார்.
விராட் கோலி ஆட்டம் குறித்து சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் மிகவும் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே மேம்படுத்தி 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.