விஜய் ஹசாரே கிரிக்கெட் – தமிழகத்திற்கு 5வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு சுருண்டது.
தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 31.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபினவ் முகுந்த் 131 ரன்கள் விளாசி (100 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தமிழக அணி அடுத்த லீக்கில் வருகிற 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது.