ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் பேசும் போது, “எனது ஒவ்வொரு படங்கள் வெற்றி பெறும் போதும் எவ்வளவு மகிழ்ச்சி வருமோ, அதே அளவு மகிழ்ச்சி உங்களை இதுபோன்ற விழாக்களில் பார்க்கும் போதும் கிடைக்கிறது.
இந்த விழாவின் நாயகன் ரஹ்மான் சார். ஆளப்போறான் தமிழன் பாடல், தமிழர்களின் அடையாளம். ஒரு விரல் புரட்சி ஒட்டுமொத்த மக்களுக்கான அடையாளம். இந்த படத்துக்கு நீங்க (ரஹ்மான்) கிடைத்தது சர்கார் படத்துக்கு ஆஸ்கார் கிடைத்தது மாதிரி. ரஹ்மான் சாருடன் பாடலாரிசிரயர் விவேக் சேரும் போது அது ஒரு மேஜிக்காக மாறிவிடுகிறது.
நாங்கள் சேரும் போதெல்லாம் வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சர்கார்ல அப்படி என்ன பண்ணியிருக்கிறார் என்றால், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார். இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடித்தேன். நீங்களும் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். கலையை வளர்க்க நிதியை அள்ளிக் கொடுக்கிறார், அதனால் தான் இவருக்கு கலாநிதி என்று பெயர் வைத்தார்கள் என்று நினைக்கிறேன்.
சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாளில், சாவித்திரி அம்மா மாதிரி ஒருவரை நம் கண் முன்னால் நிறுத்துவது என்பது எளிதில்லை. கிடைத்த வாய்ப்பை நல்லா பயன்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக சொன்னார்கள். சூப்பர், வர்றலட்சுமிய வேணாம்ணு சொல்லக் கூடாது பாருங்க. அந்த கதாபாத்திரத்திலும் அவங்க நல்ல பண்ணியிருக்காங்க. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.
எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை கொண்ட பழ.கருப்பையா ஐயாவுடன் நடித்ததை கவுரமாக நினைக்கிறேன். பேரில் மட்டுமில்லாமல், நடிப்பிலும் அப்பா பெயரை எடுத்த எம்.ஆர்.ராதாரவி சார். நாளை தீர்ப்பு படத்தில் அவருடன் எனது பயணம் தொடங்கியது. அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.
வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக ஒருகூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை, உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் இருப்பது தான், அது இயற்கையானது தான். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒன்று, வாழ்க்கை என்னும் விளையாட்டை பார்த்து விளையாடுங்கள் நண்பா.
இது யார் சொன்ன வரிகள் என்று தெரியவில்லை. ஆனால் நான் இதை பின்பற்றி வருகிறேன். அது என்னவென்றால், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை பின்பற்றி பாருங்கள் உண்மையாகவே ஜம்முன்னு தான் இருக்கிறது.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள்.
சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்கு தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.
ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு தலைவன் சரியாக நடந்தால், அவன் வழியில் அவன் கட்சியும் நல்ல கட்சியாக இருக்கும். ஆனால் ஒன்று, தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்.” என்று தெரிவித்தார்.