வெங்கட் பிரபு கூட்டணியில் சிம்புதேவன்!
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் சங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் சங்கர். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் எல்லாம் ஒன்றுகூடி விவாதித்து, வடிவேலு இந்தப் படத்தில் நடித்துத் தர வேண்டும் அல்லது இதுவரை செலவான 9 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தன. இதிலும் சரியான தீர்வு காணப்படாததால் வடிவேல் நடிப்பதற்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனையடுத்து இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், வேறொரு படத்தை இயக்கப் போகிறார் சிம்புதேவன்.
இயக்குநர் வெங்கட்பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அதாவது 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து, ஒரு கதை நிகழ்வது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி, அஜய் மாஸ்டர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.