உத்தரவு மகாராஜா- திரைப்பட விமர்சனம்
தமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க துடித்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவரான உதயா, தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘உத்தரவு மகாராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.
சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறும் உதயாவுக்கு, லட்சத்தில் ஒருவருக்கு வரும் மனநிலை மாற்றம் வந்திருப்பதாக கூறும் மருத்துவர், தற்போது அவரை குணப்படுத்திவிட்டேன், அவர் நலமுடன் வாழ்வதாக கூறுகிறார்.
மருத்துவர் சொன்னது போலவே உதயாவும் சக மனிதர்களைப் போல இருந்தாலும், திடீரென்று ஒரு பெரிய நிறுவனத்தைக் காட்டி ”இதற்கு நான் முதலாளி என்று சொன்னால் நம்புவீங்களா?” என்று தனது நண்பர்களிடம் கேட்பதோடு, தனது காதலியிடம் ”தான் ராஜராஜ சோழனின் கடைசி வாரிசு” என்று கூறுபவர், திடீரென்று தன்னை யாரோ ஒரு ராஜா, காவலாளிகளுடன் துரத்துவதாகவும், அவர் சொல்வதை செய்யவில்லை என்றால் தனது காதில் ஏதோ விசித்திரமான சத்தத்தை கேட்க செய்வதாகவும் கூறுவதோடு, அந்த ராஜ குரல் சொல்லும்படி தெரிவில் ஓடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது ”உத்தரவு மகாராஜா..” என்று கூறியபடி ரோடு ரோடாக ஓடும் உதயா, ஒரு கட்டத்தில் ”எங்கடா படம் பார்ப்பவர்களையும் பைத்தியமாக்கி ஓட வைத்துவிடுவாரோ!” என்று எண்ணும் போது, உதயாவின் பைத்தியக்காரத்தனத்துக்கு பின்னாடி பெரிய ட்விஸ்ட் இருப்பதை லேசாக நமக்கு திரைக்கதை உணர்த்த, உதயாவுக்கு உத்தரவு போடும், அவர் காதில் ஒலிக்கும் மகாராஜா குரலுக்கு பின்னாடியும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.
இந்த இரண்டு ட்விஸ்ட்டுகளுக்கு பின்னாடி ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் இருக்க, அவை என்ன? என்பது தான் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மீதிக்கதை.
ஒரு தயாரிப்பாளராக பல கஷ்ட்டங்களை தான் சந்தித்ததாக பல பேட்டிகளில் சொல்லிய உதயா, ஹீரோவாக இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை செலவழித்திருக்கிறார் என்பது படத்தின் அனைத்து காட்சிகளும் நிரூபிக்கின்றது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்றாலும், அதை வித்தியாசமான முறையில் சைக்கோத்தனமான ஒரு சப்ஜக்ட்டாக கொடுக்க நினைத்த இயக்குநர் ஆசிப் குரேஷியின் திரைக்கதை யுக்தியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றும் உதயா, படம் முழுவதும் கோட் ஷூட் சகஜமாக வலம் வருபவர், தன்னால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கையாள முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். நடிப்பில் அசுரத்தனத்தை வெளிக்காட்டியிருப்பவர், சில இடங்களில் ஓவராகவும் நடிக்கிறார். இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவையாகவே இருக்கிறது.
படத்தின் மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு பிரபுவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பிரபுவும் நடிப்பில் அசத்துகிறார். மீண்டும் டூயட், ரொமான்ஸ் என்று பிரபு ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடிக்கலாமே! என்று சொல்லும் அளவுக்கு அசத்தியிருக்கிறார்.
படத்தில் மூன்று ஹீரோயின்கள். மூன்று பேரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும், செவ்வாய் கிரகத்திற்கு போக நினைக்கும் அந்த ஹீரோயின் அழகிலும் அசத்துகிறார்.
கோவை சரளா, ஸ்ரீமன் ஆகியோரது காமெடி எடுபடவில்லை என்றாலும், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி ஆகியோரது சில காமெடிக் காட்சிகளும், ஏழ்மையின் நிலையை விளக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
நரேன் பாலகுமாரின் இசையும், பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ரொம்ப குழப்பமான திரைக்கதையாக இருந்தாலும், அதை ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக கத்திரி போட்டிருக்கும் எடிட்டரையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
ஹீரோவாக தன்னை நிரூபிக்க நினைக்கும் உதயா, இந்த படத்தில் ஹீரோ, வில்லன், காமெடியன் என்று அனைத்து வேடங்களிலும் அசத்துகிறார். படத்தின் முதல் பாதியில் உதயாவின் காதில் கேற்கும் சத்தத்தால், அவர் போடும் கூச்சல் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதற்கான பின்னணி தெரிந்தவுடன் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட, பிரபுவின் கதாபாத்திரம் எண்ட்ரியானவுடன் படம் விவிறுவிறுப்பாக நகர்கிறது.
பட்ஜெட், தொழில்நுட்பம் ஆகியவற்றால், படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை, அதை கையாண்ட விதத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் இருப்பது படத்திற்கான பெரிய பிளஷ். படத்தில் பெரும்பாலான காட்சியில் உதயா கோட் ஷூட்டோடு வர, அதற்கு பின்னணியில் இயக்குநர் வைத்த அந்த செண்டிமெண்ட் காட்சியும், அதில் நடித்த சிறுவனும், சற்று நேரத்தில் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறார்கள்.
இயக்குநர் ஆஷிப் குரேஷி, தான் சொல்ல நினைத்ததை நேர்த்தியாக சொன்னாலும், உதயா என்ற நடிகரை ரசிகர்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்கான வேலையை சேர்த்து செய்திருப்பது, ரசிகர்களை லேசாக காயப்படுத்தி விடுகிறது. இருந்தாலும், படம் முடியும் போது, அந்த காயத்திற்கான மருந்தையும் இயக்குநர் போட்டு விடுகிறார், என்பது பெரும் ஆறுதல்.
மொத்தத்தில், இந்த ‘உத்தரவு மகாராஜா’ உதயா என்ற நடிகர் கம்பீரமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் ஒரு படமாக உள்ளது.
-ஜெ.சுகுமார்