ஐ.நா சபையின் மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா தேர்வு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கென ஐ.நா சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு. இதற்காக இதர நாடுகள் உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக ஆதரவை பெற்றுள்ளது. 188 வாக்குகளை பெற்றுள்ள இந்தியா வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இருக்கும்.
இந்தியாவுடன் சேர்த்து பசிபிக் பிராந்தியத்திற்கென பக்ரைன், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.