இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிந்த இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 10 பந்துகள் மட்டுமே வீசிய தாகூர் காயத்தால் வெளியேறினார்.
இந்திய ஆடுகளத்தில் முதல் நாள் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடாது. அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களாலும் சாதிக்க முடியாது. ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த முயற்சிக்க முடியும்.
ஆனால் உமேஷ் யாதவ் தொடர்ந்து தனது வேகப்பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ரிவர்ஸ் ஸ்விங்கில் ‘கிங்’ ஆன உமேஷ் யாதவ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை 311 ரன்னில் ஆல்அவுட் ஆக்க முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 26.4 ஓவர்கள் வீசினார்.
2-வது இன்னிங்சிலும் பந்து வீச்சில் அசத்தினார். முதல் ஓவரிலேயே பிராத்வைட்டை டக்அவுட்டில் வெளியேற்றினார். அதன்பின் சேஸ், டவ்ரிச், கேப்ரியல் ஆகியோரை போல்டாக்கி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய மண்ணில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் கபில்தேவ் (1980 மற்றும் 1983) இரண்டு முறையும், ஜவகல் ஸ்ரீநாத் (1999) ஒரு முறையும் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது உமேஷ் யாதவ் அசத்தியுள்ளார்.