அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.
அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரே இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக கவிதை எழுதும் கவிஞர்களுக்கு முதலில் எளிமையாக கிடைக்கும் உவமையாக நிலவு இருந்துவரும் நிலையில், இனி ஒன்றுக்கு மூன்று நிலவுகள் இருப்பதால் உவமைக்கு பஞ்சம் இல்லை.