18 எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்கம் வழக்கு தீர்ப்பு – அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தினகரன் ஆலோசனை
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பினருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அத்துடன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தரப்பில் விரைவில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், “இந்த தீர்ப்பினால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இது ஒரு அனுபவம், சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆதரவாளர்கள் மற்றும் 18 எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.