Tamilசெய்திகள்

மீண்டும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசிப்பேன் – திருப்திதேசாய்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலை வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்ணீய ஆர்வலர் திருப்திதேசாய் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

அதன்படி, நேற்று திருப்திதேசாய் 6 இளம்பெண்களுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தார். திருப்திதேசாய் வருவதை அறிந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே கொச்சி விமான நிலையம் முன்பு திரண்டனர்.

திருப்திதேசாய் வந்த விமானம் அதிகாலை 4.40 மணிக்கு கொச்சி வந்ததும், அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வர விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், சுமூக நிலை ஏற்படவில்லை. திருப்திதேசாயை ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல கார் டிரைவர்களும் முன் வரவில்லை. இதனால் அதிகாலை 4.40 மணி முதல் இரவு 9.40 மணி வரை 17 மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த திருப்திதேசாயை திரும்பிச் செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர், திரும்பிச் செல்ல வேண்டும் என்ற போலீசாரின் வேண்டுகோளை ஏற்று திருப்திதேசாய் திரும்பிச் சென்றார். இது குறித்து திருப்திதேசாய் அளித்த பேட்டி வருமாறு:-

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நான் வருவதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள் பயந்து விட்டனர். எனவேதான் என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வர விடாமல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை கண்டு நான் பின்வாங்க மாட்டேன். மீண்டும் கேரளா வருவேன். அப்போது கொரில்லா பாணியில் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பேன். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

கேரள போலீசார் என்னிடம் கனிவாக நடந்து கொண்டனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே நான், திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

எனது வருகையால் இங்கு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது. வன்முறைக்கு நான், காரணமாகி விடக் கூடாது. எனவேதான் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இப்போது திரும்பிச் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே விமான நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஐயப்ப பக்தர்கள் 250 பேர் மீது நெடும்பாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *