தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவரை நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் டி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சுக்களால்தான் அவர் மீது மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மு.க.அழகிரி பற்றி யாரும் பேசக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அதை மீறி மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் மு.க.அழகிரி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார். இது மு.க.ஸ்டாலினிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் மறுநாள் அதற்கு எதிர்மாறான கருத்தை டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். இதுவும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று பேட்டியளித்த டி.கே.எஸ். இளங்கோவன், ”அறிவாலயத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக சோனியா வர இருக்கிறார்” என்ற தகவலை வெளியிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு டெல்லியில் உள்ள தலைவர்களை அவரே அழைத்து வருவது போன்றும் அவரது பேட்டி அமைந்திருந்தது.
டி.கே.எஸ். இளங்கோவன் இவ்வாறு கூறியது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. கருணாநிதியின் சிலை திறப்பு விழா குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில் அதுபற்றிய தகவல்களை வெளியிட்டதால் மு.க.ஸ்டாலின் அதிருப்தி அடைந்தார்.
மேலும் அவரது ஒரு தொலைக்காட்சி பேட்டி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது சந்தேகம் என்ற ரீதியில் இருந்தது. இது டி.கே.எஸ். இளங்கோவன் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்தது.
இதைத்தொடர்ந்து டி.கே.எஸ். இளங்கோவனின் பதவியை தி.மு.க. தலைமை பறித்து நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அவர் பேட்டி அளித்த போது 2016 தேர்தலில் தி.மு.க. எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது பற்றி சில தகவல்களை வெளியிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கருணாநிதி உடனடியாக அவரை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கினார். உடனே டி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தார்.
அதை ஏற்று அவருக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் மீண்டும் பதவி பறிபோக காரணமாகி விட்டது.