திருவாரூக்கு வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்!
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.
3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
அதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.
இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார்.