திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 55). அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் கண்டக்டராக பணியாற்றிய இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு செக்கிங் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். தற்போது பழனியில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பணியில் இருந்த போது அவரிடம் திருப்பூர் மாவட்ட உதவி பொறியாளர் கணேசன் பணி தொடர்பாக போனில் பேசினார். அப்போது சவுந்தரராஜிடம் அவர் ஒருமையிலும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
இதனால் பதட்டமடைந்த சவுந்தரராஜன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே சுருண்டு விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிக் கொண்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த அழுத்தம் அதிகரித்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சவுந்தரராஜ் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளேன். எந்தவித தவறும் இது வரை செய்தது கிடையாது. பணியில் இருந்த என்னை உதவி பொறியாளர் கணேசன் போனில் அழைத்து திடீரென திட்ட ஆரம்பித்தார். இதில் எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
அவர் அனைத்து செக்கிங் இன்ஸ்பெக்டர்களையும் தரக்குறைவாக பேசுவார். இது தொடர்பாக கிளை மேலாளர், மண்டல மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.