X

திப்பு சுல்தான் நிகழ்ச்சியால் இந்து, முஸ்லிம் இடையிலான அமைதி குலையும் – ஈசுவரப்பா

கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.

ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.