X

திமிரு புடிச்சவன்- திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் போலீஸ் ஸ்டோரிகள் என்றால் இரண்டே வகை தான். ஒன்று ஹீரோ டைப், மற்றொன்று வில்லன் டைப். ஹீரோ போலீஸாக இருந்தால், காவல் துறையை கடவுளாக்கிவிடுவார்கள். அதே வில்லன் போலீஸ் என்றால், அவ்வளவு தான், போலீஸ் போன்ற கேவலமான ஒருவர் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்பது போல் காட்டுவார்கள். இந்த இரண்டையும் தாண்டி வித்தியாசமாக ஒரு போலீஸை காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட விஜய் ஆண்டனியும், இயக்குநர் கணேஷாவும், அதை ரசிகர்களுக்கு பிடித்த போலீஸ் ஸ்டோரி போல படமாக்கினார்களா அல்லது ரசிகர்களை கடுப்பாக்கியிருக்கிறார்களா, என்பதை பார்ப்போம்.

பிளஸ் 2 படித்து போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் ஆண்டனி, தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரிக்குவதற்காக அவரை நன்றாக படிக்க வைக்க நினைப்பதோடு, அவருக்கு உடற்பயிற்சியையும் அளித்து வருகிறார். அண்ணனின் அக்கறையை அடக்குமுறையாக எண்ணும் தம்பி ஒரு கட்டத்தில், ஊரை விட்டு ஓடிவிடுகிறார். தம்பியை தேடி தேடி அலையும் விஜய் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர் புரோமோஷனுடன் சென்னைக்கு வர, அங்கு தனது தம்பியை கொலைகாரணாக பார்க்கிறார். தம்பியின் இந்த மாற்றத்திற்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரிக்கும் விஜய் ஆண்டனிக்கு, சிறார் குற்றவாளிகளின் பெரிய நெட்வொர்க் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் ரவுடி பற்றியும் தெரிய வருகிறது. அந்த ரவுடியை அழிப்பதைக் காட்டிலும், அவரால் குற்றவாளிகளாகும் சிறார்களின் மனதை மாற்றி அவர்களை திருத்தினால் தான், சிறார் குற்றவாளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்ற முடிவுக்கு வரும் விஜய் ஆண்டனி, அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை.

படத்தின் கருவை கேட்கும் போது, அட…அட…, என்று சொல்லத்தான் தோன்றும், ஆனால், அதை இயக்குநர் கணேஷா படமாக்கிய விதமோ “அட போங்கப்பா…” என்று சலிப்படைய வைத்து விடுகிறது. முதல் பேராவில் சொன்னது போல, இரண்டு வகையான போலீஸ் ஸ்டோரிகளைக் காட்டிலும் புதுவித போலீஸ் ஸ்டோரியை சொல்வதாக நினைத்து இயக்குநர் கணேஷா, பெரிய மேடை நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறார்.

ஒரே மாதிரியாக நடிக்கிறார், என்ற தன் மீதான விமர்சனத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தில் பல இடங்களில் கொஞ்சம் ஓவராகவே சவுண்ட் விட்டு நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தம்பி மற்றும் சிறார் குற்றாவளிகளிடம் பேசும் போது, தனது ரெகுலர் ஹஸ்கி வாய்ஸில் பேசி நடிக்கிறார். எப்படி பார்த்தாலும் அவரது நடிப்பு இந்த படத்திலும் ஒரே மாதிரியாகவும், ஓவர் ஆக்டிங்காகவும் இருக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், ஆரம்பத்தில் ஒட்டாமல் போனாலும், திரும்ப திரும்ப அவரது ஒட்டாத மாடுலேஷனை கேட்க..கேட்க…அதுவே நமக்கு பழகிவிடுகிறது.

பல படங்களில் அடியாளாக வரும் சாய் தீனா, தான் இந்த படத்தின் மெயின் வில்லன். ஆனால், மற்றப் படங்களில் அவர் எப்படி நடிப்பாரோ அதுபோல் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். ‘மீசை பத்மா’ என்ற கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் வரும் அவரது மீசை, ஒட்டு மீசை என்பது பளிச்சென்று தெரிவதால், அவரது கதாபாத்திரம் பளிச்சிடாமல் போகிறது.

சாய் தீனா வரிசையில் பல இடங்களில், முகத்தை காட்டிவிட்டு போகும் சம்பத் ராமுக்கும் முக்கியமான வேடம். படம் முழுவதும் வரும் அவர், பல ஆண்டுகளாக போலீஸ் கான்ஸ்டபிளாக இருப்பதால் விரக்தியில் இருப்பது போன்ற ஒரு வேடத்தை ரொம்ப நன்றாகவே கையாண்டிருக்கிறார். அந்த வேடத்தின் மூலம், நல்லவங்களுக்கு மரியாதை கிடைத்தால் தான், அவங்க தொடர்ந்து நல்லவங்களாக இருக்க முடியும், என்பதை இயக்குநர் விளக்கியிருக்கிறார்.

இப்படி படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இயக்குநர் கணேஷா, சில பல விஷயங்களை கையாண்டிருந்தாலும், அனைத்தும் கொஞ்சம் ஓவராக இருப்பதோடு, அதர பழசாகவும் இருப்பதால் எடுபடாமல் போய் விட, ஒரே அறுதல் பத்திரிகை நிருபர் செந்தில்குமரனின் நடிப்பு மட்டுமே. இவரிடம் இப்படி ஒரு திறமையா! என்று ஆச்சரியப்படும் விதத்தில் தனது சிறிய கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கும் செந்தில்குமரனை நம்பி, பெரிய பெரிய குணச்சித்திர வேடம் கூட கொடுக்கலாம்.

பொதுவாக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் போல பாடல்கள் வரும், ஆனால் இந்த படத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ”ஒரு பாடல் வந்த நல்லா இருக்குமே, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடுலாம்” என்று எண்ண தோன்றுகிறது. அந்த அளவுக்கு காட்சிகளும், நடிகர்களின் பர்பாமன்ஸும் நம்மை கொல்லோ கொல்லு என்று கொன்றுவிடுறது.

போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் இவர்கள் தான் இப்படி என்றால், வில்லன் அண்ட் கோ-வும் இதே வகை தான். ஸ்நைபர் ஷாட் துப்பாக்கி, பல கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்துபவன் என்றெல்லாம் வில்லனை காட்டிவிட்டு, அவரைப் பற்றி விஜய் ஆண்டனி, ஒரு சாதாரண ஏரியா மனிதர் மூலம் தெரிந்துக் கொள்வது போல காட்சி வைத்திருக்கும் இயக்குநர், இதை விட இன்னொரு கொடுமையை ரொம்ப சாதாரணமாக செய்திருக்கிறார். அதாவது, சப்-இன்ஸ்பெக்டராக ஒருவரை என்கவுண்டர் செய்யும் விஜய் ஆண்டனிக்கு, சில நிமிடங்களில் இன்ஸ்பெக்டராக புர்மோஷன் வருகிறது, அதுவும் வாக்கி டாக்கீ மூலம். தாங்கல கணேஷா…

நடிப்போடு இசையையும் சேர்த்து கையாளும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் எடிட்டிங்கையும் சேர்த்து கவனித்திருக்கிறார். நடிப்பையே சரிசெய்து கொள்ளாத விஜய் ஆண்டனி, நல்லா வந்துட்டு இருந்த இசையை இழந்த நிலையில், எடிட்டிங்கை ஏடாகூடமாக கையாண்டு, கண்டமேனிக்கு கத்திரி போட்டு காட்சிகளை சிதைத்திருக்கிறார்.

பல லட்ச பொருட்கள் தொலைந்தாலே அதை கண்டுபிடித்து தருவதில் மெத்தனம் காட்டும் காவல்துறையினரிடம், பொதுமக்கள் தங்களது வீட்டு பாத்ரூமில் இருக்கும் பக்கெட் தொலைந்தால் கூட, கண்டுபிடித்து தர சொல்லி புகார் கொடுக்க வேண்டுமாம், அப்படி அவர்கள் கண்டுபிடித்து தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமாம்., ம்ம்…!. காவல்துறையினர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கணேஷா கண்ட கனவு, கேட்க நல்லா தான் இருக்கு, ஆனால் சாத்தியமாகுமா? அல்லது சாத்தியமாகும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை வரும் விதத்திலாவது அவர் படத்தை இயக்கினாரா அதுவும் இல்லை.

மாறாக சமுத்திரக்கனியை மனதில் நினைத்து விஜய் ஆண்டனியை வைத்து படம் எடுத்தது போல, பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஹீரோ அட்வைஸ் செய்வது போல படத்தை எடுத்திருப்பதோடு, வருத்தப்பட்டா பிளட் பிரஷர், அதிகமாகும், குறையும், அதனால் ஹீரோவுக்கு பாதிப்பு ஏற்படும், என்ற மருத்துவ டிராக்கையும் வைத்து படு மெதுவாக நகரும் படத்தை, ஒரே இடத்தில் நின்றபடி ஓடும் டிரெட்மில்லர் போலவும் இயக்குநர் மாற்றி விடுகிறார்.

மொத்தத்தில், இந்த போலீஸ் ‘திமிரு புடிச்சவன்’ அல்ல ‘உடல்நிலை பாதிக்கப்பட்டவன்’.

-ஜெ.சுகுமார்