Tamilவிளையாட்டு

டெஸ்ட் போட்டி தரவரிசை – முதலித்தை தக்க வைக்குமா இந்தியா?

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது. இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுடன் 2 டெஸ்டில் மோதுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 7-ந்தேதி துபாயில் தொடங்கிறது.

இவ்விரு தொடர்களின் முடிவுகள் தரவரிசையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும் (115 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் (106 புள்ளி), ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் (106 புள்ளி) உள்ளன. பாகிஸ்தான் 7-வது இடமும் (88 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடமும் (77 புள்ளி) வகிக்கின்றன.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் ஒரு புள்ளி உயர்ந்து 116 புள்ளிகளை எட்டும். 1-0 என்ற கணக்கில் வென்றால் ஒரு புள்ளி குறையும். தொடர் சமனில் முடிந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 112 ஆக குறையும். ஆனால் முதலிடத்திற்கு பிரச்சினை வராது.

அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 108 ஆக சரிவடையும். வெஸ்ட் இண்டீஸ் அணி 85 புள்ளிகளை எட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணியின் முதலிடத்திற்கும் ஆபத்து வந்து விடும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும்பட்சத்தில் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணியினர், முதலிடத்தை தக்கவைக்கும் நோக்குடன் இந்த தொடரில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் 107 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இரண்டு டெஸ்டிலும் வெற்றி கண்டால் அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 97 ஆக எகிறுவதுடன், மயிரிழை வித்தியாசத்தில் இலங்கையை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்தை பிடிக்கும். இத்தகைய முடிவு ஆஸ்திரேலியாவை 100 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சறுக்கி விடும்.

சில வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தங்களது தரவரிசையை வலுப்படுத்திக்கொள்ளவும் இந்த தொடர் உதவும். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி (930 புள்ளி) ரன்மழை பொழிந்தால் அவரது புள்ளிகள் கணிசமாக ஏற்றமடையும். இந்தியாவின் புஜாரா (6-வது இடம்), லோகேஷ் ராகுல் (19), வெஸ்ட் இண்டீசின் கிரேக் பிராத்வெய்ட் (13), பாகிஸ்தானின் அசார் அலி (15) ஆகியோரும் அசத்தினால் தங்களது தரவரிசையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இதே போல் பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (4-வது இடம்), அஸ்வின் (8), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (10) வெஸ்ட் இண்டீசின் ஷனோன் கேப்ரியல் (11), ஜாசன் ஹோல்டர் (13), பாகிஸ்தானின் யாசிர் ஷா(18) உள்ளிட்டோர் தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *