டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் வீரர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 11 இடங்கள் முன்னேறி 829 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அபுதாபி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முடக்கியதன் மூலம் அவருக்கு தரவரிசையில் மிகப்பெரிய ஏற்றம் கிடைத்திருக்கிறது. 800 புள்ளிகளை கடந்த 10-வது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஆவார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ரபடா (882 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்திலும், அஸ்வின் 9-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இந்திய கேப்டன் விராட் கோலி (935 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (910 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (847 புள்ளி) நீடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *