X

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் – 8 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்

தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அக்டோபர் இறுதி வரை நடைபெறும்.

இதற்காக கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 23-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த இந்த முகாம்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 937 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 விண்ணப்பங்கள் வந்தன. அந்த வகையில் சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

கடந்த 9 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்த முகாம்கள் மற்றும் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 59,882 விண்ணப்பங்கள், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4,278 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 41,363, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 54,322 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.