லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
அதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.