சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை (5-ந் தேதி) குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது 6 மற்றும் 7-ந் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது புயலாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதியில் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீனவர்கள் 5-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
லட்ச தீவுப்பகுதியில் வழிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில் வழிமண்டலத்தில் சுழற்சி உள்ளது. இந்த இரு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மணமேல்குடி, தக்கலை தலா 7 செ.மீ., குடவாசல், திருவாரூர், குழித்துறை தலா 5 செ.மீ., திருமானூர், நாகர்கோவில், விளாத்திக்குளம், கோவில்பட்டி தலா 4 செ.மீ., பாடலூர், ராதாபுரம், திருவையாறு, பட்டுக்கோட்டை, கொடைக்கானல், கழுகுமலை, நத்தம், திண்டுக்கல், ஆர்.எஸ்.மங்கலம், கரம்பக்குடி, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், அறந்தாங்கி தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
மேலும் 45 இடங்களில் மழை பெய்துள்ளது.