மரண தண்டனைக்கு தடை விதிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3-வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன. 30 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
எனவே பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது. இதுபற்றி ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் பவுலோமி திரிபாதி கூறும்போது, “இந்த வரைவு தீர்மானமானது, மரண தண்டனையை ஒழிக்கிற வகையில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோருகிறது. ஆனால் நாங்கள் எதிராக ஓட்டு போட்டோம். ஏனெனில் மரண தண்டனைக்கு ஆதரவான சட்டம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இதில் தேவைப்படுகிற அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் இந்தியா கொண்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.