மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குரு ஸ்தலமான இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்வது வழக்கம்.
சமீபத்தில் குருப்பெயர்ச்சி விழா இங்கு விமரிசையாக நடந்தது. இந்த கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் கொள்ளை போனது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 2 மர்ம நபர்கள் கோவிலின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை திருடிச் சென்றது சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் தெரியவந்தது.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 4 சிலைகளையும் மீட்டு விசாரணை நடத்திய போது இவைகள் குருவித்துறை கோவிலில் திருடு போனது என தெரியவந்தது.
இது குறித்து சமயநல்லூர் துணை சூப்பிரண்டு மோகன்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீசாருடன் சென்று சிலைகளை பார்வையிட்டார். பின்னர் 4 சிலைகளும் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அதிகாரிகள் மற்றும் கோவில் ஸ்தபதிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பெருமாள், சீனிவாச பெருமாள் சிலைகளின் கை சேதமடைந் திருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை சோழவந்தான் போலீஸ் நிலையம் வந்தார். அவர் மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கோவிலில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
சிலை கடத்தல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் கொள்ளையர்கள் 4 ஐம்பொன் சிலைகளையும் ரோட்டில் வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.