மாநிலத்தின் பெயர் மாற்றம் விவகாரம் – மம்தா பானர்ஜி முடிவுக்கு மத்திய அரசு தடை

மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று, அந்த மாநிலத்தை ஆளுகிற மம்தா பானர்ஜி அரசு விரும்புகிறது. இது தொடர்பான கோரிக்கையை, மாநில சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரைப் போன்று இருப்பதால் பங்களா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டு அந்த கோப்பு, மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதா கட்சி, அந்த மாநிலத்தின் பெயரை பச்சிம்வங்கா என மாற்ற ஆதரவு அளிக்கிறது. அந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு மம்தா பானர்ஜி அரசு, 2011, 2016 இப்போது 2018 என மூன்று முறை முயற்சித்தும், மத்திய அரசை நாடியும், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.

முதலில் அவர் 2011-ம் ஆண்டு பச்சிம்வங்கா என பெயர் மாற்றம் செய்ய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை நாடினார். அது நிராகரிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் பெங்கால், வங்காள மொழியில் பங்களா, இந்தியில் பங்கால் என்று மாற்றிக்கொள்ள அனுமதி கோரி நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவிக்கையில், “ மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டுமானால் பச்சிம்வங்கா என்றுதான் மாற்ற வேண்டும். வேறு பெயர் மாற்றினால் குழப்பமே மிஞ்சும்” என கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools