X

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி- இங்கிலாந்து வெற்றி

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்தது. குசல் மென்டிஸ் 15 ரன்னுடனும், சன்டகன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து வீரர்களின் அபாரமான சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சன்டகன் 7 ரன்னில் ஜாக் லீச் பந்து வீச்சில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு ரோஷன் சில்வா, குசல் மென்டிஸ்சுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் தோல்வியை தவிர்க்க போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

அணியின் ஸ்கோர் 184 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய குசல் மென்டிஸ் (86 ரன்கள், 129 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஜாக் லீச்சால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். அடுத்து களம் கண்ட டிக்வெல்லா 19 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரோஷன் சில்வா 65 ரன்னில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக லக்மல் (11 ரன்) வீழ்ந்தார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 86.4 ஓவர்களில் 284 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஷ்பகுமாரா 42 ரன்னுடன் (40 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சு வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி வீரர்கள் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 1963-ம் ஆண்டுக்கு பிறகு அன்னிய மண்ணில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் இலங்கை அணி தோல்வியை சந்திப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு டெஸ்டில் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி இதேபோல் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே நடந்த ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.