இலங்கை அதிபரை கொலை செய்ய இந்திய உளவு துறை சதி? – மறுப்பு தெரிவித்த இலங்கை
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தின்போது தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ’ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான ‘ரா’ மீது குற்றம்சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ’ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.
சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா – இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதினர்.
இந்நிலையில், இந்த தகவலை இன்று இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான ஷ்ரிலால் லக்திலகா மறுப்பு தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல் அதிபர் மைத்ரிபாலா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.