இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – 285 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஜென்னிங்ஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 14 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ரோடி பர்ன்ஸ் 43 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். மொயின் அலி 10 ரன்னிலும், பென் போக்ஸ் 19 ரன்னிலும், அடில் ரஷித் 31 ரன்னிலும், ஜேக் லீச் 7 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், சாம் கர்ரன் 64 ரன்களில் அவுட்டாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 75.4 ஓவரில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெராரா 4 விக்கெட்டும், மலிந்தா புஷ்பகுமாரா 3 விக்கெட்டும், அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools